Tuesday 16 April 2013

ராசி--டீக்கடை


 



" ராசியின் டீக்கடை " என்றதும்  ராசி எதோ டீக்கடைக்கு போய் சண்டை  எதுவும் போட்டு விட்டாளோ , அதைப் பற்றியோ, என்று தானே
 நினைத்தீர்கள்.   கரெக்டாக சொல்லி விட்டேனா?   ஆனால் அது தான் இல்லை.

ராசி coffee shop  எதுவும் ஆரம்பிக்கிறாளோ?
அதுவும் கிடையாது.

தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கே புரியும் .

ராசி என்றைக்கும் போல், அன்றும் சாப்பிட்டு முடித்தவுடன் ,கிச்சன் வேலை  முடித்து , கதவு எல்லாம்  பூட்டியிருக்கிறதா , என்பதை ஒருமுறைக்கு இருமுறை,  நன்றாக பூட்டில் தொங்கி  விட்டுப்(பூட்டியிருக்கிறதா  என்பதை செக் செய்கிறாளாம்) படுத்துக் கொண்டாள்.  வாரப் பத்திரிகை கையில் .. டிவியில் அவள் கணவர்  IPL பார்த்துக் கொண்டிருந்தார். டிவியில் ஒரு கண்ணும், புக்கில் ஒரு கண்ணுமாக இருந்தவள்  அப்படியே தூங்கி விட்டாள் .

திடீரென்று  முழிப்பு தட்டியது.  லைட்  அணைந்திருந்தது. மேட்ச்  முடிந்து விட்டது  போலிருக்கிறது,  என்று நினைத்துக் கொண்டு கணவரைப் பார்த்தாள் .அவரோ   நித்திராதேவியின்  ஆதிக்கத்தில்  .. மீண்டும் தூங்கப் பிரயத்தனப் பட்டாள் .  ஆனால் வந்தால் தானே ! வயதாவதாலோ என்னவோ ஒரு முறை  விழிப்பு  வந்தால்............  அவ்வளவு  தான். லேசில் தூக்கம்  வருவதில்லை. அன்றும் அப்படித்தான்.

 கிர் ............................................... என்ற   ஏசியின்  சத்தம்  ரூமை  நிறைத்தது. எழுந்து லைட்டைப் போட்டு புக் படிக்கலாமா ? வேண்டாம்  ......கணவர் தூங்குகிறாரே  என்று நினைத்துக் கொண்டு பேசாமல் படுத்திருந்தாள் . மெல்ல  தூக்கம் வரும் போலிருந்தது.   கர .....கர .....கர் கர் ....என்று  ஏதோ சத்தம்.  யாரோ  கதவு  தாழ்ப்பாளை  திறப்பது போல் ........ அரைத் தூக்கத்திலிருந்த  ராசி இப்பொழுது  நன்றாகவே  முழித்துக் கொண்டாள்.

யாராவது   திருடனாயிருக்குமோ?
மெதுவாக  கணவரைத்   தொட்டாள் . திடுக்கிட்டு முழித்த அவர்   ," எத்தனை  வாட்டி  சொல்வது?  நான்  மாத்திரை எல்லாம் சாப்பிட்டு விட்டேன்.பேசாமத் தூங்கு "என்று  சொல்லி  விட்டு  திரும்பிப்  படுத்து  விட்ட இடத்திலிருந்து  தூக்கத்தைத்  தொடர்ந்தார்.

திரும்பவும்  அதே சத்தம்  " கர்  கர்  " என்று.

ராசிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.நிச்சயமாக திருடனாகத்தானிருக்கும்   என்று தீர்மானித்து  விட்டாள் .  பேசாமல்   போலிசிற்கு  போன் பண்ணி விடலாம்  என்று  தீர்மானித்தாள்.எதற்கும் ஒரு முறை தன கணவரை கேட்டு விடலாம்  என்று தீர்மானித்தாள் .

இப்படித் தான் முன்பொரு முறை தன  voterr id cardஐக்  காணோம் என்று  நேராக போலீசில் கம்ப்ளெயின்ட்  கொடுத்த கதையெல்லாம் நினைவிற்கு வந்தது.அன்று அவள் வாங்கிய திட்டு இருக்கிறதே அது இந்த ஜென்மத்திற்கு போதும் .

என்ன வேண்டுமானாலும், திட்டி விட்டு போகட்டும். "என் கணவர் என்னைத் தானே திட்ட முடியும்."  என்று நினைத்துக் கொண்டு அவரை எழுப்பினாள் .

" திடுக்  " என்று என்று முழித்துக் கொண்ட அவர் இன்னும்  தூக்க மாத்திரை ஆதிக்கத்திலிருந்து  முழுதும் விடுபடவில்லை. ராசிக்கோ பதட்டம்.
கத்திப் பேச வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு   "ஹஸ்கிடோன்"இல்   திருடன்  போல் தெரிகிறது. போலிஸ்...........என்று முடிக்கவில்லை.

அவ்வளவு தான்  விஷ்ணுவோ (அதாங்க அவள் கணவர் பெயர்)

" என்னது  போலீசா "

"இந்த நேரத்திலா?" என்று பெரிய குரலில் பதறினார்.அவர் குரலை அடக்கி விட்டு உன்னிப்பாக கவனிக்க சொன்னாள்  ராசி.

'ஏ சி' யின் " கிர் "  சத்தத்தைத் தவிர  வேறெதுவும் கேட்கவில்லை, இப்போது.

"பார் , ஒன்றுமேயில்லாததற்கு  எல்லாம் போலிசை கூப்பிடுவது  உனக்கு பிழைப்பாகப் போய் விட்டது." என்று கத்தி விட்டு,  விஷ்ணு திரும்பிப் படுத்துக் கொண்டு தூங்கினார்.

சரி ஒரு வேளை   எலியாக இருக்குமோ ? ஆனால் வீட்டில் எலியே இல்லையே .இன்று புது வரவோ  என்று நினைத்து அமைதியாக படுத்தாள்  ராசி..

'ஏ சி' சத்தத்துடன், கணவர்" கொர் " சத்தமும் இப்பொழுது சேர்ந்து கொண்டது. ஒரு விதத்தில்  இந்த  சத்தம்  அவளுக்கு  கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்தது  எனலாம்.

ஒரு நிமிடம் தான்  .திரும்ப  கர்.......  கர்............
இப்பொழுது மெல்லிய குரலில்  யாரோ பேசுவது கேட்டது. எங்கேயிருந்து வருகிறது  என்று  கவனிக்க ஆரம்பித்தாள் .
கிச்சனிலிருந்து தான்  வருகிறது  என்று புரிந்தது.  கிச்சனில் யாரோ இருக்கிறார்கள்   என்று பயந்து   " பர பர "என்று முழித்துக் கொண்டே படுத்திருந்தாள் .

அவள் கணவர் திரும்பி படுத்தவர் இவளுடைய பேய்  முழியைப் பார்த்து ,"இன்னும் தூங்கலையா?" என்றார்.

" இல்லை . யாரோ கிச்சனில் இருப்பது போல் தெரிகிறது "--ராசி

" கிச்சனிலா?  ?அங்கே என்ன இருக்கிறது? சாபிடக்கூட  ஒன்றும் உருப்படியாக இல்லை. எனக்குத் தான் தலைஎழுத்து  .திருடனுக்கு என்ன வந்தது? அவன் ஏன்  உன் சாப்பாட்டை   சாப்பிடுகிறான்.அதுவும் மீதி தான், பிரிட்ஜ்ஜில் இருக்கும் ." என்று நிலைமையின் தீவிரம் புரியாமல்  அந்த நேரத்திற்கு  ஜோக் அடித்தார்.

ராசிக்கோ  கோபம். அதற்கு மேல் பயம் வேறு.

விஷ்ணுவிற்கு  ராசியைப் பார்த்தால்  பாவமாக இருந்தது போலிருக்கிறது.
சரி. எழுந்து வா. கிச்சனில் போய் பார்க்கலாம்  என்றார்.
இவளுக்கோ  அவரைத் தனியாக அனுப்பவும்  பயம் .கூட போகவும் பயம்.

தைரியத்த வரவழைத்துக்  கொண்டு , கையில்  எதையாவது   எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று பார்த்தாள் (திருடனை அடிக்கத்  தான்).அருகில் விசிறி கிடந்தது. அதை எடுக்கப் போனாள் .

விஷ்ணுவோ "விசிறி எதுக்கு. அவனுக்கு விசிறவா?பேசாமல் வா."என்றார்.

நல்ல வேளையாக  இரண்டு நாட்களுக்கு முன்னால்  ப்ளம்பர்   வேலை செய்தது  நினைவு வர  கட்டிலடியில் இருந்த   GI  பைப் (பிவசி  பைப் இல்லை)
துண்டு ஒன்றை  எடுத்துக்  கொண்டு விஷணு  பின்னாடியே  சென்று கதவிற்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள்.
"இந்த வீரத்திற்கெல்லாம் ஒன்றும் குறைச்சலில்லை"  என்று  சலித்துக் கொண்டே விஷ்ணு  கிச்சன் கதை திறக்க  இவள்  பைப்பை ஓங்கி அடிக்க அது பெரும் சத்தத்துடன்  தரையில் விழுந்தது."(நல்ல வேளை டைல்ஸ் பிழைத்தது)

"நல்லா  பாத்துக்க " ஒருத்தரும் இல்லை. சும்மா " :தொண தொண " ன்னு தூக்கத்தை கெடுக்கக் கூடாது  என்றார் விஷ்ணு.

ராசி  கேஸ் சிலிண்டருக்கருகில் குனிந்து பார்த்தாள் .மேலே பரணில் கண்களை நன்றாக ஓட விட்டாள் .


விஷ்னுவோ ," எதுக்கும் பிரிட்ஜிலும்   ஒரு பார்வை பார்த்து விடு "  என்று நக்கலடிக்க , ராசி அவரை எரித்து விடுவது போல் பார்த்து விட்டு போய்  படுத்துக் கொண்டாள்.

ஆனாலும் அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது ,"கொஞ்ச நேரத்திற்கு முன் யாரோ பேசினார்கள்." என்று.

மொபைலில் மணி பார்த்தால் . இரவு மணி ஒன்று.
  தூக்கம் அவுட் .
விஷ்ணு தூங்கி  பத்து நிமிடம்  ஆகியிருக்கும்.
திரும்பவும்  பேசும் சத்தம் கேட்டது. விதி விட்ட வழி என்று  பேசாமல்  இருக்கலாம் என்றால் இந்தப் பாழாய் போன பயமும் பேப்பரில் படிக்கும்  கொள்ளை சம்பவங்களும்  ராசியைப் பாடாய்  படுத்தின.

அப்ப பார்த்தா இந்த  கரண்ட்டும் போய் தொலைய வேண்டும்.

இப்ப எங்கும் நிசப்தம். கதை தீட்டிக் கொண்டாள்  ராசி. ஆனால்   தலை வரை  போரத்தின  போர்வையை மட்டும் எடுக்க இல்லை. பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அரை மணி ஆகியிருக்கும். கரென்ட் வந்தபாடில்லை. போர்வையை எடுக்கலாம் என்றால்  பயமாய் இருக்கிறது.

இத்தனைக்கும் விஷ்ணுவோ கும்பகர்ண தூக்கம் .
எவளவு  நேரம் போர்த்திக்கொண்டு இருப்பது? கரெண்ட் வேறு இல்லை. வியர்வையில் குளித்துவிட்டாள் ராசி.

தைரியத்தையெல்லாம்   திரட்டிக் கொண்டு  மெதுவாக போர்வையை விலக்கினால்  .........இது என்ன  தன்  கால் மாட்டில்   யாரோ ஒருவர் உட்கார்ந்திருப்பதைப், போல் தலை மட்டும்  தருகிறது. கண்ணெல்லாம்  காணோம்.  டிவி யில்  பார்த்தது போல்  ஏதாது பேயாய் இருக்குமோ?

வீட்டிற்கு பக்கத்தில் ,ஒரு வயதான பெண்மணி இரண்டு நாட்களுக்கு முன்பாக இறந்தது நினவிற்கு வந்தது.(எதெல்லாம் நினைவிற்கு  வரக்கூடாதோ அதெல்லாம் தான் நினைவு வந்து தொலைக்கிறது)

நிஜமாகவே பேயறைந்தாற்   போல் இருந்தது   ராசிக்கு. நல்ல வேளையாக விஷ்ணுவிற்கு  முழிப்பு வந்தது.  "பகலில்  கரெண்ட் கட் செய்வது போதாது என்று இப்ப ராத்திரியிலுமா ? உஸ்.......ஹப்பா ..... என்னமாய் வியர்க்கிறது " என்று சொல்லிக் கொண்டே  டக்கென்று ராசியின்  கால்மாட்டில் கட்டிலில் சொருகி  வைத்திருந்த  விசிறியை உருவினார் விஷ்ணு.
.
அட..சீ......விசிறியா என்னை பயமுறுத்தியது  !  என்று சலித்துக் கொண்டாள்  ராசி மனதில்.
அரண்டவன்  கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்  ---உண்மையானது.

கொஞ்ச நேரத்தில் கரெண்டும் வந்தது. ஏசி   எல்லாம்   வேலை  செய்ய ஆரம்பித்தது.

மெதுவாகத்  தூக்கம் கண்ணை இழுத்தது ராசிக்கு. திரும்பவும்  சத்தம் . இப்பொழுது  கட்...கட்....கர் .....என்று கூடவே  யாரோ  ஒரு பெண் குரல்  வேறு
ராகம் போட்டு  அழுவது  போல்.

ராசிக்கும் பயத்தில் அழுகையே வந்தது. ஏதோ  பேய்  தான் என்று  உறுதியாகி விட்டது  ராசிக்கு.  காலையில் எழுந்ததும்  பக்கத்து கோவில் குருக்களைக்  கூப்பிட்டு  ஒரு கணபதி ஹோமம்   செய்ய வேண்டியது தான் என்று  தீர்மானித்துக் கொண்டாள். இப்போதைக்கு.......காக்க காக்க கதிர்வேல் காக்க ,
நோக்க நோக்க நொடியில் நோக்க.........  என்று சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்தாள்.  அப்படியே உறங்கியும் போனாள் .

ராசி  எழுந்திருக்கிறாயா?  என்று அவள் கணவர் எழுப்பியதும் தான்  அவளுக்கு முழிப்பே வந்தது. (பின்னே விடியற்காலை மூன்று  மணி வரை  பேய்  உரையாடல்  கேட்டு பயந்து கொண்டிருந்தால்  இப்படித்  தான் 7 மணி வரை தூக்கம் வரும் )

அவசர அவசரமாக  எழுந்து வாசல் தெளித்து கோலம்போட்டு  , காபி போட்டுக் கொண்டிருக்கும் போது  விஷ்ணு வந்து டேபிளில் உட்கார்ந்து Hindu  பேப்பரை விரித்தார்.திடீரென்று  " அன்பே  சுகமா......." என்று fm ல் அருமையான  பாட்டு வழிய ஆரம்பித்தது.

விஷ்ணு  உடனே  ," உன் டீக்கடை  ரேடியோவை  அதற்குள் போட்டு விட்டாயா. தினம் இந்த டைனிங் டேபிளை   ஒரு டீகடை பென்ச்  மாதிரி ஆக்கி விடுகிறாய் " என்று புலம்பினார்.

நாம் ஒன்றும் ரேடியோவை ஆன் செய்யவில்லையே என்று ராசி குழம்பும் போதே  அதுவே " டக் "  என்று நின்றது. ஓ   லூஸ்  காண்டாக்ட் ..........
சட் என்று மீண்டும்   " உன்   வீட்டுத் தோட்டம் சுகமா" என்று குசலம் விசாரித்தார்   திருமதி  சாதனா சர்கம்   ரேடியோ  வழியாக.

விஷ்ணு டக்கென்று பிடித்தார். "உன் வேலை தான். நேற்று ராத்திரி ரேடியோ ஆப் செய்யாமல் படுத்திருக்கிறாய். லூஸ் காண்டாக்ட்டில்  உன்  தூக்கம் என் தூக்கம்  எல்லாம்  கெட்டது." 

 விஷயம் புரிந்ததும்  ராசிக்கு  அப்பாடி.......என்றிருந்தது.

இப்பொழுதெல்லாம்  ராசி கதவெல்லாம் செக்  செய்யும் பொது ரேடியோ  off செய்திருக்கா? என்றும்  பார்க்கிறாள்.


image courtesy---google
paatti stories இல் இப்போது Harichandran




42 comments:

  1. அருமையான நகைச்சுவை

    அந்தக்காலத்தில் OFF செய்யாத ரேடியோவிலிருந்து இதுபோல ஓர் சத்தம் வருவது உண்டு தான்.;)

    பாராட்டுக்கள், பதிவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வைகோ சார்,

      இப்பொழுது வரும் fm ரேடியோவிலும் இந்த மாதிரி சத்தம்வருவதை சில வீடுகளில் கேட்டிருக்கிறேன்.

      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சார்.

      Delete


  2. இப்படித்தான் ஒரு நாளைக்கு அலறிப்புடைத்துக்கொண்டு
    எழுந்து...
    இங்கு மங்கும் பார்த்து...
    இருட்டில் தடவி தடவி....
    லைட் போட்டு....

    எங்கே இருந்து இந்தக்குரல்.....
    கண்டிப்பா இது அம்மா குரல் தான்

    அம்மா குரல் எப்படி வரும்....
    அவ போய் தான் அஞ்சு வருசம் ஆச்சே...

    அப்படி தில் தடக் தடக் கே கஹ் ரஹா ஹை...
    அப்படின்னு
    லப் டப் லப் டப் ஃபாஸ்ட் ...வெரி ஃபாஸ்டா பீட்ட

    இனிமே நம்மாலே தனியா ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாதுன்னு
    முடிவு பண்ணி...

    ஒரு தினுசா...
    பக்கத்துலே கட்டிலிலுலே

    தூங்கிக்கினு இருந்த கிழவியை
    ( அதாங்க... அவ தான் _

    எழுப்பி....

    .ஏதோ...சத்தம் வருது....பேச்சுக்குரல் மாதிரி கேக்குது...
    அவளும் உத்துக்கேட்டு...
    உங்க அம்மா வாய்ஸ் மாதிரி ல கேட்குது...
    என்றாள்.

    ஹார்ட் நின்னுபோய்ட்டு திரும்பி வந்தது.

    இங்கு மங்கும் நன்றாய் பார்த்தாள்.

    கட்டிலில் கார்ட்லெஸ் டெலிஃபோன் ஆனில் இருந்தது.

    ஆன்சரிங்க் மெஷின் பழைய பதிவெல்லாம் ஒவ்வொன்றாக சத்தமிட்டுக்கொண்டிருந்தது.

    மெல்லிய குரலில். அதெல்லாம் நான் அழிப்பது இல்லை.

    அதில் ஒன்று அம்மா வாய்ஸ்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தை படிக்கும் எனக்கே என் " லப்டப் " கேட்கிறதே.
      உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை பண்ணி பார்க்கிறேன்.
      நன்றி சுப்பு ஐயா, உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு .
      நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  3. நகைச்சுவையையும் மீறி, சில உண்மைகளைச் சொல்லிவிட்டீர்களே! உங்கள் கணவர் கொடுத்து வைத்தவர் என்று தெரிகிறது. நீங்கள் எழுப்பியும் தொடர்ந்து தூங்க முடிகிறதே அவரால்!

    இந்தக் காலத்தில் யார் வீட்டில் ரேடியோ போடுகிறார்கள்? எல்லா மொபைலிலும் தான் எஃப்.எம். வருகிறதே!..

    ReplyDelete
    Replies
    1. //உங்கள் கணவர் கொடுத்து வைத்தவர் என்று தெரிகிறது. நீங்கள் எழுப்பியும் தொடர்ந்து தூங்க முடிகிறதே அவரால்! //
      நீங்கள் ராசியின் கனவரைத் தான் குறிப்பிடுகிறீர்கள் என்று புரிகிறது.

      உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சார்.

      Delete

  4. மனம் ஒரு பேய். “அரண்டவன் கண்ணுக்கு “ என்றுஒரு பதிவு எழுதி இருந்தேன். பயந்தவன் மனநிலையைக் காட்டும் பதிவு. இதோ சுட்டி. படித்துப் பாருங்களேன்.
    gmbat1649.blogspot.in/2011/12/blog-post_15.html

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி GMB சார்.
      நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சுட்டியின் பதிவை படித்து கருத்திடுகிறேன் சார்.

      Delete
  5. ஹா... ஹா... திக் திக்... சத்தத்தை விட அந்த நேரத்திலும் அவர் அடிக்கும் நகைச்சுவை அருமை... ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தனபாலன் சார். உங்கள் பாராட்டிற்கு நன்றி சார்.

      Delete
  6. ஐயோ ஐயோ ஏன் ராசி இப்படின்னு எல்லாம் சொல்லமாடேன் நானும் அப்படிதான் நீங்க சொன்னவுடன் எனக்கும் ஒரு சம்பவம் நியாபகம் வருது சொல்றேன் அப்பு றம்
    சூப்பரா இருந்தது பதிவு அழக ஒரு குறும் படம் பார்த்தது போல்

    ReplyDelete
    Replies
    1. நன்றி மலர் உங்கள் அருமையான பாராட்டிற்கு.
      உங்களுக்கு நினைவு வந்த சம்பவத்தை ஒரு பதிவாக்குங்களேன். படிக்க காத்திருக்கிறேன்.

      Delete
  7. ரேடியோ படுத்திய பாடு நல்ல நகைச்சுவை.

    நானும் இரவு அலைபேசியில் பாடல்கள கேட்டு விட்டு அதை ஆப் செய்ய மறந்து விடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி கோமதி.

      Delete
  8. ////////////
    விஷ்ணுவோ "விசிறி எதுக்கு. அவனுக்கு விசிறவா?பேசாமல் வா."என்றார்.
    ///////////

    விழுந்து விழுந்து சிரித்தேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.

      Delete
  9. ஏசி சத்தத்தால் இவ்வளவு பிரச்சனையா? இல்லை மனக்குழப்பமா எனக்கு பிபி ஏறுது

    ReplyDelete
    Replies
    1. ஏ.சி. சத்தம் இல்லை fm ரேடியோ படுத்திய பாடு சார்.
      நன்றி சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  10. ரசித்தேன்... பல நேரங்களில் இப்படித் தான் மறந்து போய்விடுகிறது.... :)

    சில நாட்கள் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போதே தூங்கியிருக்கிறேன்... பழைய நினைவுகள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வெங்கட்ஜி நீங்கள் சொல்வது போல் டிவி நிறுத்தாமல் நானும் தூங்குவது வழக்கம்.உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி வெங்கட்ஜி

      Delete
  11. ராசி லூஸ் கான்டக்ட் ஆன ரேடியோவால் பட்ட பாட்டை நீங்கள் விவரித்த விதம் அருமை. எதெல்லாம் எப்போதெல்லாம் ஞாபகம் வரக்கூடாதோ அப்பல்லாம் தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது என்ற வரிகள் மிக மிக உண்மை! பதிவெங்கிலும் உங்கள் எழுத்தில் விரவியிருந்த நகைச்சுவை மிக்க ரசனை!

    ReplyDelete
    Replies
    1. என் நகைசுவையை ரசித்து படித்ததற்கு நன்றி கணேஷ் சார்.

      Delete
  12. Mami.. l still could not control my laughter! :-)

    ReplyDelete
    Replies
    1. keep laughing Manju. Ishall join you tomorrow in the laughter .
      Thankyou Manju for your appreciative comments.

      Delete
  13. லூஸ் காண்டாக்ட் சஸ்பென்ஸ் ...

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  14. பாவம்தான் ராசி. இரவு நேரங்களின் இருட்டில் எல்லாமே பயமாகி விடுகிறது! இதே போன்றதொரு அனுபவம் உண்டு! பதிவும் இட்டிருந்தோம்! நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்!!! :))

    http://engalblog.blogspot.in/2011/01/blog-post_06.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். உங்கள் பதிவை படித்துப் பார்க்கிறேன்.

      Delete
  15. Replies
    1. //T F//??? என்றால் என்ன? புரியவில்லையே!!

      Delete
  16. என்னுடைய முதல் பின்னூட்டத்துக்கு நான் புதிதாக லாக் இன் செய்ய வேண்டியிருந்ததால் பின்னூட்டங்களைத் தொடரும் பொத்தானை க்ளிக் செய்ய முடியவில்லை. எனவே இரண்டாவது பின்னூட்டம் T F

    T F = To Follow....!!!! :))))

    ReplyDelete
    Replies
    1. விளக்கத்திற்கு நன்றி.

      Delete
  17. ராசி ரேடியோவை அணைக்காமல் படுத்துக் கொண்டதன் பலன் எங்களுக்கு ஒரு நகைச்சுவை பதிவு!
    டீக்கடை பெஞ்ச் ரேடியோ படுத்திய பாடு....!நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன் இன்னும்....!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரஞ்சனி
      உங்களை என் டீக்கடை பெஞ்சிற்கு வரவேற்கிறேன்.
      வந்து கருத்திட்டமைக்கு நன்றி ரஞ்சனி.

      Delete
  18. உங்க டீக்கடை பெஞ்சில் டீயுடன்,நகைச்சுவையையும் சேர்த்து சுவைக்கலாம் போலிருக்கு.Coffee shop ஐயும் சீக்கிரமே ஆரம்பிச்சிடுங்க.பதிவு நல்லாருக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் coffee shop ஆரம்பித்துவிட்டு சொல்கிறேன்.
      மிக்கநன்றி சித்ரா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  19. பதிவு வெளியானதுமே படித்துவிட்டேன், பின்னூட்டம்தான் கொஞ்சம் லேட்டாகிடுச்சு! :)

    ஒரு எஃப்எம் ரேடியோ-வை வைச்சு நல்ல நகைச்சுவைப் பதிவு குடுத்துட்டீங்க. ஒரே ஒரு கேள்வி..இது நிஜமாலுமே நடந்த சம்பவமா? அதாவது உங்க தோழி ராசி- அவர்களின் வாழ்க்கையில் நடந்தததா...அல்லது, ராசி சீரிஸ் எல்லாமே "ராசி"- என்ற கேரக்டரை உருவாக்கி நீங்க வரிசையாக எழுதும் பதிவுகளா ராஜி மேடம்? ;) :)

    ச்சும்மா..ஒரு க்யூரியாஸிட்டியில் கேக்கிறேன், தவறா எடுத்துக்காதீங்க!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மகி.
      ராசியைப் பற்றிய கேள்விக்கு பதில் ,விரைவில் சொல்கிறேன்.
      அதுவரை keep guessing.ப்ளீஸ்........
      நன்றி.

      Delete
  20. நல்ல நகைச்சுவையான பதிவு! எழுத்தாளர் என்பதால் பயத்தை அதிகப்படுத்தும் கற்பனையும் அதிகமாக சேர்ந்து பயம் காட்டி விட்டது போலிருக்கிறது. எங்கள் வீட்டில் ஒருமுறை சமையலறையில் நுழைந்த எலி ஒன்று, இதே போல கலாட்டா செய்தது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தமிழ் இளங்கோ சார்.நலம் தானே. வேறு ஒருவர் பதிவை படிக்கும் போது திருமதி ரஞ்சனி உங்கள் கண் சிகிச்சை பற்றி நலம் விசாரித்ததை வைத்தே நானும் உங்கள் நலம் விசாரிக்கிறேன்.
      அதற்குள் கணினி முன் அமர்ந்து விட்டீர்களே!
      வந்து கருத்தும் சொல்லி விட்டீர்கள்.
      நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் சார்.

      Delete
  21. அருமையான நகைச்சுவைப் பதிவு தோழி.வாழ்த்துகள் !!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி,
      உங்கள் முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும். தொடர்ந்து வாருங்கள்.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்